காதல் பகடையாட கைப்பிடித்து எனையழைத்தாய்
விளையாட தெரியாதென்றேன் விட்டு நீயும் செல்லவில்லை
எனக்காக நீ ஆடி ஏணியேற்றி விட்டாயடி
வெற்றி தொடும் வேளையிலே ஏணியிடறி விட்டாயடி
எனை தீண்டி சென்றாயடி
கருநாகம் தீண்டினாலும் காளை நான் கலங்க மாட்டேன்
காதல் நாகம் நீ தீண்டி
கவலைகள் கொல்லுதடி
கண்ணீரும் கொட்டுதடி
அன்பெனும் நஞ்சினை நெஞ்சினில் தெளித்துவிட்டாய்
நித்தமும் சாகிறேன் நீயெங்கே சென்றுவிட்டாய்
உனக்கில்லா இரக்கம் நஞ்சுக்கென்ன வந்ததடி
உடனே உயிர்கொல்ல அதுவும் மறுக்குதடி
ஆலகால விஷமுண்ட ஆண்டவனே கேட்கிறேன்
நீயுண்ட நேரத்திலே காதலி கண்பார்த்தாள்
கழுத்தோடு நிறுத்திவிட்டாள்
அன்பெனும் நஞ்சினால் என்னவள் தீண்டிவிட்டாள்
இவள் தீண்டிய நஞ்செந்தன் இதயத்திலும் இறங்கியதே
இதற்கேதும் மருந்துண்டோ -என்
இன்னல் தீர வழியுண்டோ.?
No comments:
Post a Comment