Friday, 14 April 2017

உயிரின் ஓலம்

கிளையுதிரும் சருகுகள்
கூடடையும் பறவைகள்
சிறு சிறு தூறல்கள்
மழை வரும் அறிகுறியால்
உன் பாதை விரைகிறாய்
மேகம் பூமியோடு முத்தமிடும்
சுகந்த மணம் கடத்தி வரும்
குளிர் காற்றின் கைப் பிடித்து
கூடவே வரும் 
சர்பமொன்றின் வாயில் அகப்பட்ட
தவளையின் ஓலக் குரலை
கேட்டும் கேளாமல் போகிறாய் நீ
உனக்கொன்று தெரியுமா சகியே?
அது
உன் நினைவின் வாயில் அகப்பட்டு
மரண வலியில் கதறும்
என் உயிரின் ஓலக் குரலென்று

Thursday, 6 April 2017

கனக்கும் கவிதை

என் கவிதைகளில்
இறக்கி வைக்கிறேன்
உன்
நினைவுகளின் பாரத்தை
இதோ
இப்போது
வலியோடு
கனத்து கிடக்கிறது
என் மனதை போலவே
உன் நினைவை சுமக்கும்
என் கவிதைகளும்...

Saturday, 1 April 2017

இது காதல் ஆயுதம்

விஷ்ணு சக்கரமெடுத்தான்

சிவன் சூலமெடுத்தான்

முருகன் வேலெடுத்தான்

அனுமன் கதையெடுத்தான்

ராமன் வில்லெடுத்தான்

நாத்திகன் நானோ
காதலை கடவுளென்றேன்

அதோ
அவள் நினைவெடுத்து வருகிறது...