உறங்கி கிடக்கும் கைப்பேசி
உயிர்ப்பெற்று அழைத்தது..
ஆம்..
அழைத்தது அவள்தான்
அவள்..
என் உலகின் பெரும்பாதி
என் உயிரின் சரிபாதி
இப்போதே பார்க்க வேண்டும் உங்களை- இது அவள்
இப்போது எப்படி முடியும்?- இது நான்
இப்போது கடல் பொங்கியது அவள் கண்களில்
சொல்வதைக்கேள் அழக்கூடாது இப்போது
இப்போதல்ல எப்போதும் என்னவள் அழக்கூடாது
நாளைப் பார்க்கலாம்- இது நான்
எப்போது விடியும் இந்த இரவு?
கதிரவனுக்கு முன்பே கண்விழித்து
இரவுக்கு விடைகொடுத்தோம்
அன்பின் முகம் காண..
இதோ..
அந்த அழகிய நாள்...
அதோ..
அவள் வருகிறாள்
மணற்காகிதத்தில் பாதத்தூரிகையால்
சுவடெனும் ஓவியம் வரைந்து
அவற்றை முத்தமிட்டு வாரிச்செல்ல
அலைகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்டிருந்தன..
விழியின் சாரல்கள்
விரலின் ஸ்பரிசங்கள்
இதழின் கூடல்கள்
எல்லாம் முடிந்து
தோள் சாய்ந்து கடல் பார்த்து
காதல் பேசிக்கொண்டிருந்தோம்
தென் தமிழெல்லையில்..
கதிரவன் மட்டும்
பொறாமைக் கண்ப்பார்த்து
இடம்மாறி நிழல்தேட
காதலின் கரம்பிரித்தான்
சிலஒரு நொடிகள்
அலைகள் அதன் தோழிகளோடு
ஒன்றன்பின் ஒன்றாக வந்து
என்தோள் சாய்ந்து கிடந்த
என்னவள் முகம்கண்டு
காதல் வாழ்த்துச் சொல்லி சென்றது
ஆழிப்பேரலை இப்போது நம்மை அள்ளிச்சென்றால்?
அவள் முகம்பார்த்து கேட்டேன்
சென்றால் என்ன.?
கனவன் மனைவி இருவரும் ஒன்றாக உயிர்ப்பிரிய
உலகில் கொடுத்து வைக்கவேண்டும்..
இது அவள் பதில்
இப்படியெல்லாம்
என்னை அன்பால் ஆட்சி செய்தவள் எங்கே சென்றாயடி நீ இப்போது
என் காதல் தேசம் விட்டு.?
இதோ
இன்று நான் மட்டும்
உன் நினைவுப் பேரலையில் சிக்கி
கண்ணீர் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்...