மரமாக நின்று கொண்டிருக்கிறேன்
இதோ
மரங்கொத்தியாய் வரும் அவள் நினைவுகளோ
கொத்தி கொத்தி துளையிடுகிறது
என் மனம் முழுவதும்
நீங்கள் யாரும் அறிவதில்லை
நான் வேரில் அழுவதை
மரமாக நின்று கொண்டிருக்கிறேன்
இதோ
மரங்கொத்தியாய் வரும் அவள் நினைவுகளோ
கொத்தி கொத்தி துளையிடுகிறது
என் மனம் முழுவதும்
நீங்கள் யாரும் அறிவதில்லை
நான் வேரில் அழுவதை
உன் ஊரில்
உன் வீதியில்
உன் வாசலிலெல்லாம் எப்படியோ
ஆனால்
என் ஊரில்
என் வீதியில்
என் வாசலில்
உனக்கு பின்னரான நாட்களில்
மழையென்ற பெயரில்
பொழிந்து போவதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும் சகியே...
*
மழையும் வெயிலும் சேர்ந்தே பொழியும்
இந்த பின்மதிய வேளை
எல்லோருக்கும் எப்படியோ?
ஆனால் எனக்கோ
அழுகையும் தந்து ஆறுதலும் தரும்
உன் நினைவைப் போலிருக்கிறது...
*
கோடை மதியமொன்றில்
கொட்டித் தீர்த்த மழையை
சூட்டை கிளப்பி போனதாக
சொல்லிப் புலம்புகிறார்கள் அவர்கள்
நானும் புலம்புகிறேன் எனக்குள்ளே
உன் நினைவை கிளப்பி போனதாக...
*
உனக்கொன்று தெரியுமா சகியே
அடைமழையின்
இரவு காலங்களில்
நான்
போர்த்திக் கொள்வதெல்லாம்
உன் நினவுகளைதான் என்று....
*
"மழை நேரத்துல வெளியே போகாதீங்க
அப்புறம் நனைஞ்சுட்டு வந்து
காய்ச்சல் அது இதுனா
நான் மனுஷியா இருக்க மாட்டேன்"
கொஞ்சமும் அழியாமல்தான் வருகிறது
கொட்டிப்போன அன்பின் வார்த்தையெல்லாம்
கொட்டித் தீர்க்கும் இம்மழையோடு...
*
காயப்போட்ட துணிகளை எடுக்கவும்
மொட்டைமாடி வடகம் அள்ளவும்
குடைமறந்த கணவன் குறித்தும்
பதறி கொண்டிருக்கிறாய் நீ
மழைவிழத் துவங்கும் இவ்வேளையில்
நானும் பதறிதான் துடிக்கிறேன்
ஆம் சகியே
மழை கொண்டு வரும்
உன் நினைவுகளை எண்ணி ...
மருத்துவ முத்தம்
♡
நிதமும் நோய் தந்து போகிறது
நின் நினைவின் முத்தங்கள்
இன்னுமேன் தாமதம்
இதழ் கொண்டு வா சகியே
இப்போது எனக்கான தேவையெல்லாம்
ஒரே ஒரு மருத்துவ முத்தம்
கடைசி பேருந்து வரை
காத்திருந்து விட்டுதான் வருகிறேன்
ஒவ்வொரு நாள் முடிவிலும்
என்றாவது வந்து விடாதா?
'தொலைந்து போன உன் காதல்'
சிறு மழலையின் தீண்டல்
துளி மழையின் தீண்டல்
ஒரு மலரின் தீண்டல்
ஞாபகப்படுத்தி விடுகிறது
உன் முத்த ஸ்பரிசங்களை
என்னை ஞாபகப்படுத்ததான் எதுவுமில்லை
இயல்பாய் சுற்றும் உன் பூமியில்
சரி
ஒன்று மட்டும் சொல்லடி சகியே
என் ஞாபகங்களையெல்லாம் மூட்டைக்கட்டி
எந்த சமுத்திரத்தில் எறிந்தாய்...?
தேன் சொட்ட தந்த
தெவிட்டாத முத்தங்களெல்லாம்
தீர்ந்து போன ஓர் நாளில்
மறக்கச் சொல்லி சென்றாய்
ஆனாலும் சகியே
முத்த தினமெல்லாம்
முடிந்துபோன பின்பும்
முடிந்தபாடில்லை
முடிந்துபோன காதலின் கருணை
ஆமாம்.. இதோ..
நினைவின் இதழேறி வரும்
நின் முத்தங்களெல்லாம்
நெஞ்சமெங்கும் தடம் பதிக்கிறது
இப்போது
அமிலம் பட்டதாய் அலறித் துடிக்கும்
அன்பால் சாகும் உயிரின் சத்தம்
காற்றின் சிறகேறி வருகிறது
"கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே"
எப்படியாவது தூங்கிவிட வேண்டும்
உன்னை நினைக்காமல் இன்றிரவு
ஆமாம்
சபதம் எடுத்துக் கொண்டேன்
பண்பலை பாடல்கள் தாலாட்டிக் கொண்டிருந்தது
இமைகள் இறுகத் துவங்கிய வேளை
உயிருக்குள் ஒலிக்கத் துவங்கியது
உனைப் பாடச் சொல்லிக் கேட்ட
"ஊருசனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி"
இசைஞானி மெல்லிசை மன்னரோடு
இப்போது
கூட்டனி சேர்ந்திருந்தது உன் நினைவுகளும்
என் இரவைக் கூறு போட....
காற்றின் முதுகில் பயணித்து வரும்
மேற்கு தொடர்ச்சி மலையின் சாரல்
என் சன்னல் வழி நுழைந்து
உறங்கிக் கொண்டிருந்த
உன் நினைவுகளின் முகத்தில்
நீரையள்ளித் தெளித்துப் போகிறது
விழித்த நினைவுகளோ
வேலையை காட்டுகிறது இப்போது
ஆம் சகியே...
காற்றலையில் மிதக்க விட்டுப் போன
உன் காதல் சொற்களெல்லாம்
இதோ
என் உயிர் கூட்டில் எதிரொலிக்கிறது
"மழை பெய்யும் போது
சன்னலை சாத்திட்டு தூங்குங்க" என்று
இனி
இந்த இரவு முழுவதும்
உன் நினைவின் சாரலையெல்லாம்
கனமழையாய் கொட்டித் தீர்க்க கூடும்
விழித்துக் கிடக்கும் என் விழிகள்
வெளிச்சம் கொண்டுவரும்
அந்த நிலா
விட்டு போன
உன் நினைவுகளையும்
கொண்டு வருவதுதான்
எத்தனை துயரமடி சகியே...
ஜன்னலடைத்து
நிலவை மறைத்துவிட்டேன்
இதோ
இப்போது
விழியுடைத்து வழியும்
உன் நினைவை என்ன செய்ய?
'இன்னொரு முறை
குடிக்கும் போது
எனக்கொரு பாட்டில்
விஷத்தை வாங்கித் தாருங்கள்'
உனக்கென்னடி சகியே
சொல்லிவிட்டு போய்விட்டாய்
இதோ
துளித் துளியாய் பருகும்
வோட்காவிற்கு
"உன் நினைவின் வாசம்"
கிளையுதிரும் சருகுகள்
கூடடையும் பறவைகள்
சிறு சிறு தூறல்கள்
மழை வரும் அறிகுறியால்
உன் பாதை விரைகிறாய்
மேகம் பூமியோடு முத்தமிடும்
சுகந்த மணம் கடத்தி வரும்
குளிர் காற்றின் கைப் பிடித்து
கூடவே வரும்
சர்பமொன்றின் வாயில் அகப்பட்ட
தவளையின் ஓலக் குரலை
கேட்டும் கேளாமல் போகிறாய் நீ
உனக்கொன்று தெரியுமா சகியே?
அது
உன் நினைவின் வாயில் அகப்பட்டு
மரண வலியில் கதறும்
என் உயிரின் ஓலக் குரலென்று
என் கவிதைகளில்
இறக்கி வைக்கிறேன்
உன்
நினைவுகளின் பாரத்தை
இதோ
இப்போது
வலியோடு
கனத்து கிடக்கிறது
என் மனதை போலவே
உன் நினைவை சுமக்கும்
என் கவிதைகளும்...
விஷ்ணு சக்கரமெடுத்தான்
சிவன் சூலமெடுத்தான்
முருகன் வேலெடுத்தான்
அனுமன் கதையெடுத்தான்
ராமன் வில்லெடுத்தான்
நாத்திகன் நானோ
காதலை கடவுளென்றேன்
அதோ
அவள் நினைவெடுத்து வருகிறது...
இருட்டை வெரித்து
விழித்தே கிடக்கும்
என் ஒவ்வொரு இரவுகளையும்
இரத்தம் சொட்ட சொட்ட
சிலுவையிலடிக்க வரும்
உன் கூர் நினைவுகளுக்கு
எனது அகராதியில்
இப்போதும்
காதல் என்றுதான் பெயர்
இன்னைக்கு என்ன நாள் தெரியுமா லூசு?
என்ன நாள்?
காதலர் தினம்னு சொல்லிக்கிறாங்க
அதுக்கு?
ம்ம்ம்.. அதுக்கு ஒன்னுமில்ல
நாம காதலர்களா?
இல்ல...
பின்ன.. நாம யாராம்?
கணவன் மனைவி
பின்ன என்னடி
நாமதான் தினமும் கொண்டாடுறோமே காதலர் தினத்தை
ம்ம்ம்... ஆமா... 'ஐ லவ் யூ'
"ஐ லவ் யூ டா"...
சரி.. சரி..
காதலர் தினமாம் இன்று
காதலின் ஞாபக மழையில்
கண்கள் நனையும் வேளையில்
காரணம் யாரேனும் கேட்டால்.
காற்றின் மீது பழியை போட்டு விடு
என்னைப் போலவே நீயும்
கண்களில் தூசி விழுந்ததென்று
முதுகுத்தண்டில் ஊர்ந்து
மூளையில் நின்றாடி
நாடி நரம்புகளில் நகர்ந்து
இதயத்தில் இறங்கி
இறுகிப் பிணைந்து
உயிர்த் தீண்டிப் போகிறது
உன் நினைவு சர்பங்கள்
இதோ
இன்றைய விடியலிலும்
வானம் வெறித்து
வாயில் நுரைத் தள்ளி
இறந்து கிடக்கிறது
என் துயிலா இரவுகள்...
காதல் உரமிட்டு
செழிப்பாய்தான் வளர்திருந்தாய்
பச்சைப் பசேலென
என் வாழ்க்கைச் சமவெளியை
இதோ
நீயற்ற பொழுதுகளில்
உன் நினைவின் பற்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய் இரையாகும்
என் உயிரின் அழுகுரல்
கொஞ்சம் சன்னமாகவாவது கேட்கிறதா உனக்கு?
கானும் பொங்கல் இன்று
காடு
கரை
கழனி
ஆறு
அருவி
மலை
கோவில்
குளம்
கண்டுதான் வந்தேன் நான்
இன்னும் என்னென்னவோ.
காதல் திருவிழாவில்
தொலைந்த என்னையும்
தொலைத்த அவளையும் தவிர...
வாழ்நாள் வாசகனாக்கி விட்டாய் என்னை
என் இதய அலமாரியெங்கும் நிரம்பியிருக்கும்
உன் நினைவு புத்தகங்களுக்கு...
யாரோ ஒருவர் கையைப் பிடித்து நடக்கும்
கோவில் திருவிழாவில்
வழி தப்பிய சிறுவனாய்
உன் நினைவுகளை பிடித்துக் கொண்டு
காதல் திருவிழாவில் தொலைந்த நான்
காதல் கோவிலின் வாசல் அது
கை நீட்டுகிறேன் உன்னிடம்
யாசிக்கும் ஏழையாய் நான்
காணிக்கையிட்டு போகிறாய்
வாரி வழங்கும் வள்ளலாய் நீ
நிறைய நிறையவே நினைவுகளை
சவம் என்னா கனம் கனக்கு
தூக்குபவர்கள் சொல்வார்கள் கண்டிப்பாக
நாளை நான் செத்தப் பிறகு
ஆமாம்
ஜென்மத்துக்கும் சேர்த்து வைத்த
உன் நினைவின் கனமும் என்னோடல்லவா
எல்லோரும் சொல்கிறார்கள்
பித்து நிலையில் இருப்பதாக என்னை
அவர்களுக்கெப்படி தெரியும்
உன்னையே நினைத்து உன்னையே உளரும் நான்
முக்தி நிலையில் இருப்பது
ஜன்னலோர பயணியாய் நான்
அதோ கை வீசி வருகிறது
உன் நினைவுகள்
கண்ணீர் வரவழைக்கும் காற்றாக
அதனாலென்ன
ஜன்னலோர பயணமே இரசிக்கதானே
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு கிளியிடமெல்லாம் இல்லை
என்னை மறந்து விடுங்கள் என்ற
உன் ஒற்றை வார்த்தையில்தான்
கொஞ்சம் கொஞ்சமாய் போய்க் கொண்டிருக்கிறது
இந்த காதல் ராஜாவின் உயிர்
அப்படி
எங்கேதான் ஓடி விட முடியும் என்னால்
உன் நினைவுச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு
பெண்ணே....
நீயாவாது சொல்லடி
என் கால்களில் சங்கிலியிட வேண்டாமென்று