அடிக்கடி ஆட்டிப் படைக்கும் என்னை
அப்படியொரு தலைவலி அன்றெல்லாம்
வலியில் துடிக்கும் என்னிடம்
வந்துரைப்பாள் அவள்
"என் மடியில் படுத்துக் கொள்ளுங்கள்
தலையை பிடித்து விடுகிறேன்" என்று
அவளால்தான் அறிந்தேன்
அன்பின் வார்த்தைகளும் மருந்தாகுமென்று
தாய்மடி சேயாய் அவள்மடி துயில
தலைவலி வரவே தவம் கிடப்பேன் மீண்டும்
ஆனால் இன்றோ
உயிர்வலி உணரும் வார்த்தையொன்றை
உரைத்துப் போகிறாள் அவள்
ஆமாம்
கொஞ்சம் கொஞ்சமாக
"என்னை மறந்து விடுங்கள் என்று"
அவளால்தான் அறிகிறேன் இப்போதும்
அன்பின் வார்த்தைகளும்
ஆளைக் கொல்லும் விஷமாகுமென்று...
Tuesday, 1 December 2015
உயிர்வலி உணர்கிறேன் இன்று
Thursday, 5 November 2015
நான் உறங்க வேண்டும் காதலி
எங்கே தொலைத்தாய்..?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
எங்கே தொலைத்தாயடி உன் இரக்கத்தை
என் உறக்கமது தொலைந்ததும் அங்கேதான்
ஆமாம்..
அதனால்தான் கேட்கிறேன்..
எங்கே தொலைத்தாய்?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
"நான் உறங்க வேண்டும் காதலி"
Wednesday, 4 November 2015
கடையேழு வள்ளல்களின் வாரிசு அவள்
பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தானாம்
பாரி முல்லைக்குத் தேர் தந்தானாம்
அதிகன் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தானாம்
அடிப்போடி..
அப்படியொன்றும் பெரிய வள்ளல்களில்லை அவர்கள்
ஆமாம்
உன்னை விடவா உலகில்
உயரந்த வள்ளல்கள் இருக்கப் போகிறார்கள்?
ஆயுளுக்கும் அழுவதற்கு தந்துள்ளாயே
தானமாக உன் நினைவுகளை...
Thursday, 29 October 2015
கொள்ளைப் போகாத உன் நினைவுகள்
கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
ஆமாம்
கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
கொள்ளைப் போகாத உன் நினைவுகளை
என் இதய வங்கியில் நிலை வைப்பாக
ஆனால் இன்றோ...
தீர்ந்து போன உன் அன்பினால்
தீரா கடனாளியாய் தினமும் கட்டுகிறேன்
என் "கண்ணீர்த் துளிகளை" வட்டியாக...
Tuesday, 20 October 2015
உன் காதல் சொன்ன காலமிது...
இதோ
இந்த நவராத்திரி காலங்களில்தான்
கொலுவாய் வந்தமர்ந்தாய்
என் இதய அலமாரியின்
ஒவ்வொரு படிகட்டுகளிலும்
அன்பின் உருவமாய்
அன்னையின் வடிவமாய்
மழலையாய் மனைவியாய்
இன்னும் எத்தனை எத்தனை உறவுகள்?
அத்தனை உறவுகளையும் ஒன்றாய் குழைத்து காதலியாய்...
அன்றே
ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் நீ
கொலு வைத்த பொம்மைகளையெல்லாம்
ஓர் நாள் திரும்ப பெறுவேன் என்று
ஆமாம்.. சொல்லியிருந்தால்
கொள்ளை போன பொம்மைகளை நினைத்து
குமுறி அழும் குழந்தையாய்
இருந்திருக்க மாட்டேன் நான் இன்று..
Wednesday, 7 October 2015
நினைவெனும் வாள்....
போன்சாய் மரமாக நான்
ஆமாம்
போன்சாய் மரமாக நான்
வெட்டி விடுகிறாய் நீ
ஒவ்வொரு நாளும் துளிர்விடும்
என் சிறு சந்தோஷ கிளைகளையும்
உன் நினைவனும் வாள் கொண்டு...
Monday, 14 September 2015
நன்றி காதலி
அழுவதால் மன அழுத்தம் குறையுமாம்
அழுவதால் கண் பார்வை தெளிவாகுமாம்
கண்ணீர் கண்களை சுத்தமாக்குமாம்
கண்ணீர் கிருமி நாசினியாம்
.
.
.
"நன்றி காதலி"
"உனக்கும் உன் நினைவுகளுக்கும்"
Saturday, 5 September 2015
இது காதலின் கோரப் பசி
அனுதினமும்
என் உறக்கங்களை உணவாக்கி கொள்கிறது
கண்ணீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறது
அப்படியென்ன கோரப் பசியோ தெரியவில்லை
"அவளின் நினைவுகளுக்கு"
Friday, 4 September 2015
உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்
கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறேன்
சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்
படித்துக் கொண்டிருக்கிறேன்
தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறேன்
சமையல் செய்து கொண்டிருக்கின்றேன்
சும்மாதான் இருக்கின்றேன் லூசு சொல்லுங்க
இப்படியாக பதிலுரைப்பாய்
இறுதியில் ஒரு லூசையும் சேர்த்து
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்ற கேள்விகளுக்கு அப்போதெல்லாம்
இப்போது நீ
ம்ம்.. தெரியும்
உன் கணவனோடு பேசிக் கொண்டிருப்பாய்
ஆனால்
நானோ...?
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி
எனக்கென்னவோ ஒரே வேலைதானடி
ஆமாம்
"உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்"
Tuesday, 1 September 2015
ஆயிரம் ஜென்மங்கள் காத்திருப்பேன்
ஊடல் கலைந்து கூடல் வேளைகளில்
கோபமாடா செல்லம்
என்று நான் கேட்கும் தருணங்களில்
கோபமெல்லாம் இல்லை
என் மீது கொண்ட உங்கள் அன்பு
இப்போது இன்னும் கூடியுள்ளது
இப்படிதான் மொழியுதிர்ப்பாள் அவள்
இப்போது
அவள் ஊடல் கொண்டு செல்கிறாள்
ஊடல்
இது அன்பைக் கூட்டும் கருவிதான்
அதற்க்காக இப்படியாடி செய்வாய்
என்னவளே..!
ஏனடி என் ஆயுள் முழுமைக்கும்
ஊடல் கொண்டு செல்கிறாய்
அடுத்த ஜென்மத்தில் அன்பை பொழியவா?
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல
ஆயிரம் ஜென்மங்கள் காத்திருப்பேன் நான்
உன் அன்பிற்க்காக...
இரக்கமற்ற அவள் நினைவுகளால்
ஆண்டுக்கொரு முறை மட்டுமல்ல
அனுதினமும் கொண்டாடுகிறேன் நான்
என் இரவின் விழிகளில் சிவராத்திரியை
ஆமாம்
என் உறக்கம் உண்டு உயிர் வாழும்
இரக்கமற்ற "அவள் நினைவுகளால்"
Monday, 31 August 2015
இன்று எனது பிறந்தநாள்
உம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மா செல்லம்...
ஆமாம்
இத்தனை அழுத்தமாகதான்
இல்லை.. இல்லை..
இன்னும் அழுத்தமாகவே இருக்கும்
அன்றைய நாளின் முதல் மணித்துளி.
குளித்து விட்டு சாமி கும்பிடுங்கள்
புதுசட்டை அனியுங்கள், நேரத்துக்கு சாப்பிடுங்கள்
யார் மீதும் கோப படக்கூடாது இன்று
இன்று முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
ஆமாம்
இப்படியாக இருக்கும் அன்போடு அறிவுறைகளும்
அன்றைய தினத்தின் காலைப் பொழுதுகளில்
இதோ..
இன்றும் அந்த நாள்தான்
கடைசி மணித்துளிகளை நெருங்குகிறது
எங்கே அந்த அன்பும் அறிவுறைகளும்.?
இன்று என்ன நாள் தெரியுமா லூசு?
இன்று உங்களை முதலில் பார்த்த நாள்
இன்று காதலை சொன்ன நாள் என்று
இதயக் குறிப்பில் எழுதிய
ஒவ்வொரு காதல் நாட்களையும்
அவள்தானே ஞாபகபடுத்துவாள் எனக்கு
அப்படியிருக்க எப்படி மறந்திருப்பாள்..?
மறந்து போயிருந்த எனக்கு ஞாபகபடுத்திவிட்டு
அவள் எப்படி மறந்து சென்று விட்டாள்
என்னவளே..!
எப்படி மறந்தாயடி...?
ஞாபகமில்லையா உனக்கு
"இன்று எனது பிறந்தநாள்"
Saturday, 29 August 2015
விழியில் வழியும் கவிதை
ஒரு கவிதை கூட எழுதவில்லை
கடந்த சில நாட்களாக
எழுதிவிட வேண்டும் இன்று
எப்படியாவது ஒரு கவிதை
தனிமையில் தவம் கொண்டேன்
கவிதை வரம் வேண்டி
கண்களை மூடி
எத்தனை இரக்கம் என்மேல்
அவளின் நினைவுகளுக்கு
கேட்டதும் வரம் தந்து செல்கிறது
யோசித்துக் கொண்டிருக்கிறேன் இப்போது
விழியில் வழிந்தோடிய கவிதைகளை
எப்படி எழுதுவதென்று...
Wednesday, 19 August 2015
இன்னும் உன் நினைவுகளில்
மேஷம்-கவனம்
கல்லூரி கவனமாக சென்று வா
சாலையைக் கடக்கும் போது பார்த்து போ
மழையில் நனைந்து விடாதே
சமையல் செய்தால் கவனமாக செய்
இரவில் இருட்டில் வெளியே செல்லாதே
அடிப்போடி...
இப்படிதான் இன்னும் நான்
பழைய பஞ்சாங்கத்தையே
பாடிக் கொண்டிருக்கிறேன் எனக்குள்ளே...
சரி. என்னை விடு...
நீ சொல்
என்னவளே..
என்னை விட உன்மேல்
அதிக அக்கறை கொள்கிறானா
ராசி பலன் பார்த்து விட்டு
உன் கனவன்...?
Tuesday, 18 August 2015
மறந்துச் சென்றவள்
மறந்துச் சென்றவளை
மறக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று
ஆமாம்
நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
"நாட்காட்டி ராசி பலன்களில்"
Monday, 17 August 2015
அழ வைக்கும் அவள் நினைவுகள்
அனுதினமும்
அழ வைத்துப் பார்க்கிறது என்னை
ஆமாம்
அழ வைத்துப் பார்க்கிறது என்னை
"அவளின் நினைவுகள்"
இன்று நான் தோற்கலாம்
ஓர் நாள் வெல்வேன்
அவள் நினைவுகளை
ஆமாம்
ஓர் நாள் வெல்வேன்
என் மரணமெனும் ஆயுதம் கொண்டு...
Sunday, 9 August 2015
அவளின் நினைவெனும் கால எந்திரம்
முதல் நாள்
முதல் வகுப்பிற்குச் செல்லும்
பள்ளிக் குழந்தையைப் போல்
அழுது அடம்பிடிக்கிறேன்
நான் வரவில்லையென்று
ஆனால்..
இந்த
இரக்கமற்ற நினைவெனும் கால எந்திரமோ
கடத்திக் கொண்டுப் போட்டு விடுகிறது
என்னை
"அவளின் காதல் காலங்களில்"
Wednesday, 5 August 2015
என்னடி சொல்ல நான்..?
இதோ இங்கே பாரடி
இந்த மழைக் கூட
என்னிடம்
எக்காளமாய்ப் பேசுகிறது இன்று
ஆமாம்..
அன்று என்னில்
நனைந்து விடாதீர்கள்
நனைந்து விடாதீர்கள்
என்றுரைத்தவளை
எங்கே என்று...
Saturday, 18 July 2015
என்னைப் பிடிக்கும் என்றவளின் நினைவோடு
மழலை பிடிக்கும் மலர்கள் பிடிக்கும் என்றே
மங்கையவள் உரைக்கின்றாள் பிடிப்பன எல்லாம்
பிடிக்கும் வண்ணமென்னவோ பிரியமானவளுக்கு என்றேன்
பிடித்த வண்ணம் ஸ்கை ப்ளூ என்கிறாள்
அப்படியென்றால் ஆங்கிலம் அறியாதவனாய் நான்
அப்படியென்றால் வான ஊதா லூசு லூசு
தமிழ் விளக்கம் தந்தவள்-என்
தலையில் குட்டும் வைக்கிறாள்
காலங்களின் கால்கள் ஓடிய வேளையில்
காதலின் மனமும் மாறிச் செல்கிறாள் . .
இதோ
என் தனிமையோடு போட்டிப் போட்டு தவழ்ந்து செல்லும் நிலா
என் கண்ணீரோடு போட்டிப் போட்டு கலைந்து செல்லும் மேகங்கள்
என் அன்பினோடு போட்டிப் போட்டு அனைந்து போகும் விண்மீன்கள்
இவற்றை விடுத்து ரசிக்கின்றேன்
என் தனிமையின் வானில்
"ஸ்கை ப்ளூ"வை
எல்லாம் விட இவ்வுலகில்
"என்னைப் பிடிக்கும் என்றவளின் நினைவோடு"
Wednesday, 15 July 2015
அவள் கண்களில்...
கவிஞராக வேண்டுமென்றால்
புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டுமாமே
நான் படித்து விட்டேன்
உலகின் எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும்
இன்னும் எழுதப்பட போகிற புத்தகங்களையும்
ஆமாம்
"அவள் கண்களில்"
Monday, 13 July 2015
அவளை வரையறுக்கிறேன்....
தருமி போல் நானும் தவிக்கின்றேன்
தமிழ் வார்த்தையும் வறட்சியோ வாடுகின்றேன்
என்னவளை வர்ணிக்க ஏதேதோ பாடுகின்றேன்
எங்கெங்கோ நானும்தான் வரிகளை தேடுகின்றேன்
எதுகையோ மோனையோ எதுவும் தெரியாது
இலக்கண இலக்கியமோ இவனுக்கு புரியாது
அடியோ சீரோ அதுவும் புரியாது
அணியால் அழகூட்ட அதுவும் தெரியாது
வெண்பா விளையாட்டும் விளையாட தெரியாது
வித்தக கவிபடைக்கும் வித்தையும் தெரியாது
கவிமொழி அறியாத கவிஞன் நானோ?
காதலியை வர்ணிக்கும் காதலன் நானோ?
கவிதைதான் என்றே நானும் சொன்னால்
கம்பனே நீயும் மண்ணிப்பாயோ?
அவள் முகிலின் மகளை முடியாய் சூட்டியவள்
அவள் முழுதாய் எனைதான் ஆட்சியும் செய்பவள்
மயில்களும் ஆடும் அவளின் மழைகுழல் காண
மலர்களும் தேடும் மங்கையவள் சூட
நிலவின் பிறையை நெற்றியாய் கொண்டவள்
நிலவின் நிறையை முகமாய் கொண்டவள்
கருப்பு வானவில்லை இரு புருவமாய் வளைத்தவள்
கருவண்டுகள் இரண்டினை விழிச் சிறையினில் அடைத்தவள்
அனுதினம் ஆயிரம் கவிதைகள் பேசும்
இருவரிக் கவிதையாய் இதழினை கொண்டவள்
அவள் கன்னம் வரைந்த வெட்கச் சிவப்பினில்
அந்தி வானச் சிவப்பை அடிமையும் செய்தவள்
வலம்பரிச் சங்கோ இடம்புரிச் சங்கோ தெரியாது
முத்து மாலைச் சூடும் கழுத்தினை- என்
முத்த மாலைச் சூட்ட தருபவள்
மோட்சம் இங்கேயென எனை மூழ்கச் செய்தவள்
இடம்பல தாண்டி இடை வந்து சேர்ந்தேன்
இடையினில் எனை சுமக்க ஆசையும் கொண்டேன்
இக்கணமே குழந்தையாக மாற வரமும் கேட்டேன்
இங்கேயே இருந்துவிட முடிவும் கொண்டேன்
அன்னைப் போல் என்னைதான் மனதினில் சுமப்பவள்
அவள் மழலை நானென அள்ளிக் கொள்பவள்
அவள் மடியினில் நானும் துயில்கையில்
அன்பெனும் மழையினை பொழிபவள்
கண்டம் பல தாண்டி காலடி வந்தேன்
கைகள் இரண்டும் தொழுதே பக்தனாய் நின்றேன்
சுவடெனும் ஓவியம் வரைந்து செல்லும்
பாதத் தூரிகைகளை பாதமாய் கொண்டவள்
அவள் பாதம் தொடும் மண்ணெல்லாம்
பாவம் போக்கச் செய்பவள்
இன்னுமென்ன மிச்சம்?
ஓ மச்சம் மட்டும் மிச்சம்
அழகை வரைந்த வரைந்த பிரம்மனவன்
சிதறிய தூரிகை துளிகள் அவை
அழகின் படைப்பு அவளோடு
முடிந்ததன் முற்றுப் புள்ளிகளும் அவை
அவள் அன்னைக்கு முன்பே பிரம்மனும் வைத்தானோ
எப்போதும் திருஷ்டி பொட்டாய் முகத்தில் ஒரு மச்சம்
பின்கழுத்தில் ஒரு மச்சம் இன்னும் சில மிச்சம்
அவை நான் காண எனக்கெங்கோ மச்சம்
இத்தனை சொல்லியும் பெயர் சொல்ல மறந்தேனோ
என்னவளின் பெயர் கேட்டால் கவிதையென்று சொல்வேனோ
"கவிதை"தான் அவளின் பெயரானதோ
அவளின் காதல்தான் எனது உயிரானதோ
எழுத்தறியா எனையும்தான் கவிஞனாக்கி சென்றாளவள்
எப்போதும் அவள் நினைவால் கவிபாடச் செய்தாளவள்
இவ்வுலகம் எங்கெங்கும் என் எழுத்தறியச் செய்தாளவள்
Thursday, 2 July 2015
நினைவில் வாழக் கற்கவில்லை.. கனவில் வாழக் கற்றுக்கொண்டேன்...
நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று
என்று நானும் பொய் சொல்வேனோ-இனி
என்றுதான் நானும் துயில் கொள்வேனோ?
நினைவில் வரும் உன் நினைவெல்லாம்
நித்தம் என்னை கொல்லுதடி
நெருப்பில் உருகும் மெழுகைப் போல்
நித்தமும் நெஞ்சம் உருகுதடி
கனவாய் தினமும் விடிகின்றாய்
கண்ணீர் துளியாய் வடிகின்றாய்
காற்றாய் என்னை தொடுகின்றாய்
கானல் நீராய் மறைகின்றாய்
தோழியென்று தோள் தந்தாய்
அன்னையென்று மடி தந்தாய்
ஆசையோடு அன்னமூட்டினாய்
ஆயிரமாயிரம் என்னமூட்டினாய்
அன்னைப் போல் அமுதூட்டினாய்
அன்பையும் நீ சேர்த்தூட்டினாய்
இன்று ஏன் எனை வாட்டினாய்
இதயத்தின் வலி கூட்டினாய்
நினைவை தொலைக்க நானும்தான்
நித்தம் அதனை தேடுகின்றேன்
மூளையில் மூழ்கிப் போனதோ
இதயத்தில் இதமாய் துயில்கிறதோ
நரம்புகளில் ஒழிந்து கொண்டதோ
உயிரில் உயிராய் உறைந்திட்டதோ
உன் நினைவை தொலைக்க வேண்டுமென்றால்
நான் என்னை தொலைக்க வேண்டுமடி
என்னை தொலைக்க வேண்டுமென்றால்
என் மரணம் இன்றே வேண்டுமடி
பார்வைகளை நான் தொலைத்திருந்தால்
வெளிச்சத்தை நான் தேடிடுவேன்
பாதைகளை நான் தொலைத்திருந்தால்
வழிகளை நான் தேடிடுவேன்
பாவி உன்னை தொலைத்ததனால்
இன்று என்னை நானே தேடுகின்றேன்
பேசி சென்ற வார்த்தையெல்லாம்
காற்று திரும்ப பெற்றிடுமோ?
முத்தம் எழுதிய கவிதையெல்லாம்
முழுதும் இன்று அழிந்திடுமோ?
நினைவில் வாழக் கற்க வில்லை
கனவில் வாழக் கற்று கொண்டேன்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு
கவிதைப் பூக்கள் பறித்துக் கொண்டேன்
மரணம் என்னை தொடும்போது-உன்
நினைவை மறந்து போவேனோ?
எரிந்து சாம்பல் ஆனாலும்-உன்
நினைவின் துகளாய் பறப்பேனோ?
நிரம்பி வழியும் என் விழி அணைகள்
கடுங்கோடை காலத்திலும்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்
ஆமாம்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்
போதும் போதும்
என்று சொல்லுமளவிற்கு
அவள்
"அன்பு மழை" பொழிந்துச் சென்றதால்...
மனம் முழுதும் காதல் வலி
கண்ணாடி பார்க்கும் போதெல்லாம்
கண்ணீர் வருகிறது..
எத்தனை நரைமுடிகள் இளநரையாய் என்னில்?
இதற்காகவா கண்ணீர்?
இல்லை இல்லை
பின் ஏன் இந்த கண்ணீர்.?
மழலையாக அவள் மடியில்-நான்
மஞ்சம் கொண்ட ஒரு நொடியில்
வியர்வை நனைத்த முடிகளை
விரலால் கோதி சொல்லுகிறாள்...
"நாளை நம் பிள்ளை தங்களை
அப்பா என்று அழைக்காது
தாத்தா என்று அழைக்குமென்று"
இது
மங்கையவள் உரைத்த மொழி
இன்றோ
என் மனம் முழுதும்
"காதல் வலி"
Monday, 22 June 2015
என்னைப்பற்றி...
எண்பத்தி மூன்றில் பிறந்தேன்
இன்னும் தவழும் குழந்தை நான்
இறைவன் எழுதிய கவிதையில்
எழுத்துப் பிழையாய் நானோ?
குயவன் செய்த பானையில்
குறையாய் இங்கு நானோ?
படைப்பவன் பிழை செய்தால்
பாவம் நான் என்ன செய்வேன்?
கணம் தாங்கும் வரை
கண்ணீருடன் சுமத்தாள் அன்னை
எடைக் கூடினாலும் எனை
இன்றும் சுமக்கும் தந்தை
தோளில் சுமத்த தோழர்களை
அன்பால் சுமக்கும் சொந்தங்களை
நினைக்க நானும் மறந்ததில்லை
ஆழக்கிணறு கண்டதில்லை
ஆற்றில் ஆடிக் குளித்ததில்லை
ஆலவிழுதில் ஆடியதில்லை
ஆசைதீர ஓடியதில்லை
மரத்தின் உச்சி தொட்டதில்லை
மலைகள் ஏறி மலைத்ததில்லை
இருந்தும் கவலை கொண்டதில்லை
என் கால்கள் பயணம் கண்டதில்லை
களைத்து நானும் இளைத்ததில்லை
தினம் கனவில் நானும் பயணம் செய்து
இனி கவியில் நடக்க துடிக்கின்றேன்
எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன்
இவ்வுலகம் கொஞ்சம் அறிந்து கொண்டேன்
முகம் சுளிக்கும் மூடர் கண்டேன்
முகம் மலரும் மனிதமும் கண்டேன்
பிழைக் கவிதை எழுதியவன்
பெண்ணவளை அனுப்பி வைத்தான்
புதுக்கவிதை நீங்களென புதியவளை பேச வைத்தான்
அன்னையின் மறுவுருவாய் அவளைதான் பார்க்க வைத்தான்
அன்பிற்கு இலக்கணமோ என்றென்னை வியக்க வைத்தான்
நான்கு பத்து மாதங்களாய்
மனைவி என்று மொழியுரைத்தவள்
மணம் மாறச் செய்தானோ-எனை
மணம் வாடச் செய்தானோ
எத்தனை வலி கடந்திருப்பேன்
இவ்வலியும் கடப்பேனோ?
இல்லை இறுதிவரை சுமப்பேனோ?
உடல்வலி போதாதென்று உள்ளவலிக் கூட்டினாலும்
உடைந்து நானும் போக மாட்டேன்
உயரம் இன்னும் பறப்பேன்-என்
துயரை எல்லாம் துறப்பேன்
பிறைநிலா ஒன்றும் குறையல்ல அது
பௌர்ணமியின் பயணம்தான்
நிறைநிலா ஒன்றும் புனிதமல்ல
அதிலும் சிறு கலங்கம்தான்
செல்கள் எல்லாம் செத்து செத்து
செயல் இழக்கும் உறுப்பகளில்-என்
சிந்தை என்றும் சாகாமல்
சில கவிதைகளின் கிறுக்கல்களில்
என் உடற்திடம் குறைவுதான் ஒத்துக்கொள்கிறேன்
ஆனால்
மணத்திடம் மலையளவு மார்த்தட்டுகிறேன்
என்மீது தூவும் இகழ்வெல்லாம்
விதைமுகம் தூவும் மண்போல
விதைகளும் வீருகொள்ளும்
விருட்சமாய் நாளை வெல்லும்
இனி
கானகம் முழுதும் நான் நடப்பேன்
கவிதை கனிகள் தினம் பறிப்பேன்
ஆழக் கடலில் தினம் நடந்து
கவிதை முத்துக்கள் கோர்த்திடுவேன்
நீலவானில் நான் நடந்து
கவியால் நிலவை கடத்திடுவேன்
என் கால்களை முடக்கம் செய்யலாம்
எழுதும் கைகளை முடக்கம் செய்யலாம்
இறக்கும் வரை முடியாது
என் நம்பிக்கையை முடக்கம் செய்ய..
ஆமாம்..
இறக்கும் வரை முடியாது யாரும்
"என் நம்பிக்கையை முடக்கம் செய்ய"
Thursday, 11 June 2015
அவளின் திருமணத்தன்று...
அவளின் திருமணத்தன்று அடைமழை பெய்தது
அவளின் திருமணத்தன்று அடைமழை பெய்தது
அவள் அரிசி அதிகம் தின்றிருப்பாளாம்
இது கிராமிய பதில்
காற்றழுத்த தாழ்வுநிலை
இது அறிவியல் பதில்
இன்னும் ஏதேதோ காரணங்கள் யார்யாரோ சொல்லலாம்
அடைமழையின் காரணம்
ஆண்டவன் அறிவானோ நானறியேன்
ஆனால் அவளறிவாள் நானறிவேன்
அவளின் திருமணத்தன்று அடைமழை பெய்தது
ஆம்..
பெய்தது மேகமல்ல
"என் விழிகள்"...
Wednesday, 10 June 2015
இன்னும் துளிர்ப்பாகவே உள்ளன...
ஒன்று நான் ஒன்று நீங்களென்று
வாழ்த்து அட்டையில்
நீ வரைந்தனுப்பிய
இரு ரோஜாக்களும்
இன்னும் துளிர்ப்பாகவே உள்ளன..
என் நெஞ்சிலுள்ள
உன் நினைவுகளைப் போல...
Tuesday, 9 June 2015
அவள் நினைவுகளும் வேண்டும்...
நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
ஐம்பூதங்கள் மட்டும் போதாது
நான் உயிர்வாழ
ஆறாம் பூதமாய்
அவள் நினைவுகளும் வேண்டும்
Wednesday, 3 June 2015
அவளின் நினைவுகளால்...
என்ன செய்வேன் நான்..?
எப்போதும் பழிபோடுகிறேன்
இந்த ஏதுமறியா தூசு மீது
ஆம்..
இடம் பொருள் ஏவல் அறியாத
அவள் நினைவுகளால்...
Tuesday, 2 June 2015
காதல் பைத்தியம்
சட்டைக் கிழித்து வீதியில் அலையவில்லை
தன்னை மறந்து மொழிகள் உளறவில்லை
காரணம் ஏதுமின்றி கண்டபடி சிரிக்கவில்லை
ஆனாலும்
நான் பைத்தியம்தான்
ஆமாம்
நான் பைத்தியம்தான்
என்
இதயம் கிழித்து
உன் நினைவு வீதிகளில் சுற்றித்திரியும்
"காதல் பைத்தியம்"
என் இரண்டாம் மரணம் நோக்கி...
இறந்தபின் எவரேனும் உயிர்வாழ முடியுமா?
மானிட வாழ்வில் இது சாத்தியமா?
சாத்தியம்தான்..
இதோ நான் வாழ்கிறேனே
அவள்
என்னை மறந்துவிடுங்கள் என்று சொல்லிய
அன்றுதான் நான் இறந்தேன்
ஆமாம்
அன்றுதான் நான் இறந்தேன்..
இறந்தும் உயிர்வாழ்கிறேன் அதிசயம்தான்..
இருமுறை இறக்கும் அதிசயமும்
என்னால்தான் நிகழப்போகிறது இவ்வுலகில்
ஆம்..
அவள் நினைவுகளோடு
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
என் இரண்டாம் மரணம் நோக்கி...
Saturday, 30 May 2015
பசிகொண்ட காதல்
எண்ணிப்பார்க்கிறேன் இப்போது
இந்தக் காதல்
இத்தனை செழிப்பாய்
இந்த உலகில்
எப்படி வளர்ந்ததென்று?
வளராதா பின்னே
என் கண்ணீரை உண்பதுபோல்
இன்னும் இவ்வுலகில்
எத்தனைப்பேரின் கண்ணீரை
உணவாய் உண்டு
உயிர் வாழ்கிறதோ?
ஓ காதலே..
வா...
இதோ
அவள் நினைவுகளை விறகாக்கி
என் நெஞ்சினை அடுப்பாக்கி
உனக்கான உணவை சமைத்து விட்டது
என் விழிகள்
நினைவுகள் தீர்ந்துப்போகாது
இதனால்தான்
நித்தமும் நீ செழிக்கிறாய் காதலே
நித்தமும் நீ செழிக்கிறாய்...
Wednesday, 27 May 2015
சிறகுதிர்ந்த பறவையாய்...
பறவையாக நானும்மாறி
அந்த வானம்தொட ஆசைக்கொண்டேன்
பூமியெங்கும் நான் பறந்து
புதுக்கவிதைப்பாட ஆசைக்கொண்டேன்
காதல் செய்தால் வானில் பறக்கலாம்
படித்ததோ கேட்டதோ நினைவிலில்லை ஆனால்
பறக்கும் ஆசையோ எனை விடவில்லை
எங்கிருந்தோ வந்தாளவள்
எனைக்கூட்டிச் சென்றாளவள்
காதல் சிறகை கட்டிவிட்டு
வானம் பறக்கச் செய்தாளவள்-என்
வாழ்க்கை மறக்க செய்தாளவள்
கனவுலகிலும் நனவுலகிலும் நான்
காதல் வானில் பறந்திருந்தேன்
காலை மாலை மறந்திருந்தேன்
என்னடி இது விளையாட்டு?
இதுதான் என் முதல்பாட்டு
பாடல்வரி அழிக்கின்றாய்-என்
சிறகிரண்டை முறிக்கின்றாய்
என் இதயத்தில் முளைத்திருந்த சிறகிரண்டை கேட்கின்றாள்
காற்றில் ஊதி விளையாட
காதல் சிறகை பிய்க்கின்றாள்
சிறகுதிர்ந்த பறவையாய் செத்து நான் போகாமல்
தினமுமவளை பாடுகின்றேன்
சிந்தையால் அவள் நினைவெழுதி
தினமுமவளை தேடுகின்றேன்
இறக்கும் தருவாயும்
என் இதயம் கேட்கும் உன் உறவைதானடி
இறகிரண்டை இழந்தாலும்
இப்போதும் நான் பறவைதானடி
ஆம்..
"சித்திரைக் குயிலாய்"
நித்திரையில்லாமல்
"உன் நினைவு கிளைகளில்"
இப்போதும் நான் பறவைதானடி...