Thursday, 2 July 2015

நினைவில் வாழக் கற்கவில்லை.. கனவில் வாழக் கற்றுக்கொண்டேன்...

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று
என்று நானும் பொய் சொல்வேனோ-இனி
என்றுதான் நானும் துயில் கொள்வேனோ?

நினைவில் வரும் உன் நினைவெல்லாம்
நித்தம் என்னை கொல்லுதடி
நெருப்பில் உருகும் மெழுகைப் போல்
நித்தமும் நெஞ்சம் உருகுதடி

கனவாய் தினமும் விடிகின்றாய்
கண்ணீர் துளியாய் வடிகின்றாய்
காற்றாய் என்னை தொடுகின்றாய்
கானல் நீராய் மறைகின்றாய்

தோழியென்று தோள் தந்தாய்
அன்னையென்று மடி தந்தாய்
ஆசையோடு அன்னமூட்டினாய்
ஆயிரமாயிரம் என்னமூட்டினாய்

அன்னைப் போல் அமுதூட்டினாய்
அன்பையும் நீ சேர்த்தூட்டினாய்
இன்று ஏன் எனை வாட்டினாய்
இதயத்தின் வலி கூட்டினாய்

நினைவை தொலைக்க நானும்தான்
நித்தம் அதனை தேடுகின்றேன்
மூளையில் மூழ்கிப் போனதோ
இதயத்தில் இதமாய் துயில்கிறதோ
நரம்புகளில் ஒழிந்து கொண்டதோ
உயிரில் உயிராய் உறைந்திட்டதோ

உன் நினைவை தொலைக்க வேண்டுமென்றால்
நான் என்னை தொலைக்க வேண்டுமடி
என்னை தொலைக்க வேண்டுமென்றால்
என் மரணம் இன்றே வேண்டுமடி

பார்வைகளை நான் தொலைத்திருந்தால்
வெளிச்சத்தை நான் தேடிடுவேன்
பாதைகளை நான் தொலைத்திருந்தால்
வழிகளை நான் தேடிடுவேன்
பாவி உன்னை தொலைத்ததனால்
இன்று என்னை நானே தேடுகின்றேன்

பேசி சென்ற வார்த்தையெல்லாம்
காற்று திரும்ப பெற்றிடுமோ?
முத்தம் எழுதிய கவிதையெல்லாம்
முழுதும் இன்று அழிந்திடுமோ?

நினைவில் வாழக் கற்க வில்லை
கனவில் வாழக் கற்று கொண்டேன்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு
கவிதைப் பூக்கள் பறித்துக் கொண்டேன்

மரணம் என்னை தொடும்போது-உன்
நினைவை மறந்து போவேனோ?
எரிந்து சாம்பல் ஆனாலும்-உன்
நினைவின் துகளாய் பறப்பேனோ?

No comments:

Post a Comment