Wednesday, 28 December 2016

காத்திருக்கும் என் கனவுகள்

நேற்று இரவு அவள் வந்திருந்தாள்
"என்னை மறந்து விடுங்கள்"
என்று சொல்லி விட்டு
இன்னொருவனை மணம் முடித்துச் சென்றவள்
அவள் அப்படியேதான் இருந்தாள்
இல்லை.. இல்லை..
கொஞ்சம் சதைப் போட்டிருந்தாள் 
"எப்படி இருக்குறீங்க"
நலம் விசாரித்தவள் பின்பு
ஒழுங்கா நேரத்துக்கு சாட்டுங்க
எதுக்கும் கவலை படாதீங்க
யார் மேலையும் கோப படாதீங்க என்று
தினமும் முன்பு  பாடும்
பழைய பல்லவியை பாடினாள்
சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள் 
நேரம் ஓடிய வேளையில்
விடைபெற கையசைத்தவளை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் 
இதோ
இரவாக தொடங்கி விட்டது
நேற்றைப் போல் வந்து விடுவாள்
இன்று இரவும்
காத்திருக்கும் என் கனவுகளில்...

Sunday, 18 December 2016

உயிர்த் தீ அணையட்டும்

எரிகிறதை பிடுங்கினால் 
தானாக அணையுமாம்... 

பெண்ணே... 
வா... 
வந்து பிடுங்கிச்செல் 
என் நெஞ்சில் கொழுந்து விட்டெரியும் 
உன் நினைவுகளை... 

அப்போதாவது அணையட்டும் 
என் 
"உயிர்த் தீ"

Thursday, 15 December 2016

கல்லறை உறக்கம்

பாவம் உன் நினைவுகள்
என் கல்லறையையேச் சுற்றி சுற்றி வருகிறது
சொல்லிவிடு சகியே அதனிடம்
இனி
இவன் உறக்கம் கலைக்க முடியாதென்று...

Thursday, 1 December 2016

காதலுக்கு கொல்லி வைக்கிறாய்

சாதியிலிருந்தும்
மதத்திலிருந்தும்
அந்தஸ்திலிருந்தும்
இன்னும்
அணையாத பழைய பகையிலிருந்தும்
நெருப்பெடுக்கிறார்கள் அவர்கள்
காலம் காலமாய் வாழும்
காதலுக்கு கொல்லி வைக்க 
ஆனால்,
நீயோ..
வார்த்தையில் நெருப்பெடுத்து வீசுகிறாய் என்னில்
"என்னை மறந்து விடுங்கள்" என்று...

Friday, 21 October 2016

உன் நினைவுக் காட்டில் செத்து கிடக்கிறேன்

உனை எண்ணி எண்ணி
எழுதும் கவிதையில்
பிண்ணி பிண்ணிக் கிடக்கிறது
என் உயிரின் வலி

உன் நினைவுகளை
போர்த்திக் கொண்டு
விழித்து கிடக்கிறது
 என் இரவுகள்

என் இரவுகளையும் பகல்களையும்
தின்று செரிக்கும்
உன் நினைவுகளின் பசிக்கு
இன்னும் மிச்சமிருக்கிறது
 என் உயிர்

முன்னுரை முடிவுவரை என
இரண்டையும் நீயே எழுதியவள்
இடைப்பட்ட பக்கங்களை
விட்டுச் சென்றிருக்கிறாய் வெற்றிடமாக
கண்ணீரைத் தவிர வேறென்ன எழுத?
உன் நினைவுகளை வைத்துக் கொண்டு

ஒரு வழியாக ஓடிவிட்டது
உன் நினைவோடு இன்றைய பொழுது.
நாளைய பொழுதும் இப்படித்தான்...

கண்ணு ரெண்டும் ஏன் செவந்திருக்கு?
எல்லோரும் கேட்கிறார்கள்
உறங்கா இரவுகளில்
உன் மருதாணி நினைவுகளை
பூசிக் கொண்ட விழிகளைப் பார்த்து

புரையேறுகிறது, தும்மல் வருகிறது..
யாரோ நினைக்கிறார்களாம்
எத்தனை பொய் இது
ஆமாம் பின்னே .
நினைப்பதற்க்கு நீயே இல்லாத போது

யாரும் தேடவில்லை
நீயும் கூட
உன் நினைவுக் காட்டில்
செத்துக் கிடக்கும் என்னை...
#மணி_அமரன்

Tuesday, 27 September 2016

அமுக்குவான் பிசாசு

அமுக்குவான் பிசாசு
அது எப்படி இருக்கும்?
தீயில் எரிந்த உடம்பிருக்காது
இரத்தம் தோய்ந்த நீள நாக்கிருக்காது
அகோரமாய் சிரிக்கும் கோரப் பல்லிருக்காது
வெள்ளை ஆடையில் வீதி அலையாது
கேட்கலாம் நீங்கள்
பின் எப்படிதான் இருக்குமன்று?
அமுக்குவான் பிசாசு
பிரிந்த காதலியின் நினைவுகளை போலிருக்கும்

Tuesday, 21 June 2016

என் கண்ணீர் துளிகள்

நம்மிருவர் பெயரையும் சேர்த்தெழுதி பச்சைக் குத்த தேகம் தந்த மரங்களின் தழும்புகளில் பசையாய் ஒட்டிக் கிடக்கிறது "என் கண்ணீர் துளிகள்"

Friday, 17 June 2016

காதலோடு கல்லறையில்...

இரவை உறங்க வைத்து விட்டு
இருவரும் விழித்திருந்த
காதல் காலங்கள் அது..

விடியும் வரை பேசிப் பேசி செலவழித்தும்
குறைந்தப்பாடில்லை அன்றைய இரவுகளில்
நம்மிடம் வார்த்தைகளும் முத்தங்களும்...

அதிகாலை ஐந்திற்கு இரவு வணக்கம் சொல்லியவள்
"டியர் "என்று திரை விடிய  செய்வாய்
எனக்கு முன் கண் விழித்து

"தூங்குமூஞ்சி இன்னும் எழ வில்லையா" என்று
எழுத்தின் விசைத்தட்டி என்னில் எறிவாய்
செல்லத் திட்டல்களோடு அடுத்து

கொஞ்சம் கோபத்தோடும் நெஞ்சம் பதைப்போடும்
பதிலில்லா நிமிட இடைவெளியில்
அழைப்பின் விசையை அவசரப் படுத்துவாய்...

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...?
பாதியில் துண்டிப்பவனை
"எங்க லூசு போயிட்டீங்க?" என்று
அர்ச்சனை செய்து விடிய வைப்பாய்
அன்றெல்லாம் இவன் காலையை..

இப்போதும் உறங்கி கொண்டுதான் இருக்கிறேன்
ஆனால்
ஒருபோதும் வருவதில்லை உன்னிடமிருத்து
கைப்பேசி வழி காதல் மொழிகள்
ஆமாம்
தொடர்பு எல்லைத் தாண்டி உறங்கும்
இவனின் கல்லறை தூக்கத்தை கலைப்பதற்கு...

Saturday, 12 March 2016

என் காதலை கொன்றவள் நீ

தண்டவாள மரணங்கள்
தூக்கில் மரணங்கள்
விஷ பாட்டில்கள்
கௌரவ கொலைகள்
இப்படி இன்னும் எத்தனையோ?
ஆனாலும்
இவற்றிலெல்லாம் இறந்து விடாத காதலைதான்
கொன்றிருந்தாய் நீ
"என்னை மறந்து விடுங்கள்" என்ற
உயிர் கொல்லும் வார்த்தையால்....

Tuesday, 1 March 2016

சொல்லி விடுங்கள் அவளிடம்

தொல்பொருள் ஆராய்ச்சாயாளர்களே...
சொல்லி விடுங்கள் அவளிடம்
என்றேனும் ஒரு நாள்
மன்னில் புதையுன்ட
என் மனம் கிடைத்தால்
அதில் நிரம்பிருக்கும் அவளின் நினைவுகளை
சொல்லி விடுங்கள் அவளிடம்...

காதல் கொண்ட என் இரவுகள்

இப்பபடியாகதான்
சில விழிகளோடு கவிதைகளாகவும்
என் விழிகளோடு கண்ணீராகவும் உறவாடிவிட்டு
ஒவ்வொரு நாட்களும் உயிர் விடுகிறது
காதல் கொண்ட என் இரவுகள்

Monday, 15 February 2016

நினைவின் துளிகள்

உன் காதல் குல சாமிக்கு
பலி ஆடு நான்...

செவிகளில் நுழைந்து விழிகளில் வழிகிறது
நீயுனக்கு பிடிக்குமென்று சொன்ன பாடல்களெல்லாம்..

கழுத்தறுப்பட்ட சேவல்
கலப்பையில் சிக்கிய புழு
காதல் கொண்ட என் இதயம்
எத்தனை கூர்மையடி உன் நினைவுகளுக்கு...

"அவ நல்லா இருக்கா அண்ணா" என
உன் தோழிகள் சொல்லி கேட்க
என் விழிகளில் வழிவது
ஆனந்தக் கண்ணீர் என கொள்க...

தினமும் சாகிறேன் தினமும் உயிர்த்தெழுகிறேன்
அனுதினம் அறைகிறாய் நீயென்னை
உன் நினைவுச் சிலுவைகளில்...

"மழையில் நனைந்து விடாதீர்கள்"
என்று நீ கூறிய அக்கறை வார்த்தைகள்தான்
குடைப் பிடித்தும் நனைத்துப் போகிறது
இன்றைய மழைக் காலங்களில் என் விழிகளை

என் புத்தக பக்கங்களில் ஒழித்து வைத்துள்ளேன்
நீ தலை வாரும் வேளைகளில்
மயிலிறகு சேகரிக்கும் மழலையாக மாறிய காலங்களை...

அடிக்கடி அழுகின்றேன் இப்போதெலாம்
அழ வைப்பதென்னவோ
அன்று நீ கேட்ட
"ஆம்பள அழலாமா லூசு"???

ஒளித்து வைத்துக் கொள்கிறேன் இதயத்திற்குள்ளேயே
யாரவது வரும் வேளைகளில்...
விழிகளைத் தாண்டி வரும் உன் நினைவுகளை...

வானம் பார்த்த பூமி நான்
வான் மழைதான் நீ
ஆயினும் உன்னையேச் சாரும்
என்னை தரிசாக்கிச் சென்ற பெருமை...

தீரா தாகம் போல
என் தலையனையில் அடைத்து வைத்துள்ள
உன் நினைவுகளுக்கு..

"கண்வலிப் பூக்கள்"
உன் நினைவுகளைதான் சொல்கிறேன்

கவிதைகள் பற்றி எனக்கொன்றும் தெரியாது
எண்ணிப் பார்க்கிறேன் உன் காதலை
கண்ணீர் வருகிறது.. கூடவே கவிதைகளும்...