Saturday, 18 July 2015

என்னைப் பிடிக்கும் என்றவளின் நினைவோடு

மழலை பிடிக்கும் மலர்கள் பிடிக்கும் என்றே
மங்கையவள் உரைக்கின்றாள் பிடிப்பன எல்லாம்

பிடிக்கும் வண்ணமென்னவோ பிரியமானவளுக்கு என்றேன்
பிடித்த வண்ணம் ஸ்கை ப்ளூ என்கிறாள்

அப்படியென்றால் ஆங்கிலம் அறியாதவனாய் நான்
அப்படியென்றால் வான ஊதா லூசு லூசு

தமிழ் விளக்கம் தந்தவள்-என்
தலையில் குட்டும் வைக்கிறாள்

காலங்களின் கால்கள் ஓடிய வேளையில்
காதலின் மனமும் மாறிச் செல்கிறாள் . .

இதோ

என் தனிமையோடு போட்டிப் போட்டு தவழ்ந்து செல்லும் நிலா

என் கண்ணீரோடு போட்டிப் போட்டு கலைந்து செல்லும் மேகங்கள்

என் அன்பினோடு போட்டிப் போட்டு அனைந்து போகும் விண்மீன்கள்

இவற்றை விடுத்து ரசிக்கின்றேன்
என் தனிமையின் வானில்
"ஸ்கை ப்ளூ"வை

எல்லாம் விட இவ்வுலகில்
"என்னைப் பிடிக்கும் என்றவளின் நினைவோடு"

Wednesday, 15 July 2015

அவள் கண்களில்...

கவிஞராக வேண்டுமென்றால்
புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டுமாமே

நான் படித்து விட்டேன்
உலகின் எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும்
இன்னும் எழுதப்பட போகிற புத்தகங்களையும்

ஆமாம்
"அவள் கண்களில்"

Monday, 13 July 2015

அவளை வரையறுக்கிறேன்....

தருமி போல் நானும் தவிக்கின்றேன்
தமிழ் வார்த்தையும் வறட்சியோ வாடுகின்றேன்
என்னவளை வர்ணிக்க ஏதேதோ பாடுகின்றேன்
எங்கெங்கோ நானும்தான் வரிகளை தேடுகின்றேன்

எதுகையோ மோனையோ எதுவும் தெரியாது
இலக்கண இலக்கியமோ இவனுக்கு புரியாது
அடியோ சீரோ அதுவும் புரியாது
அணியால் அழகூட்ட அதுவும் தெரியாது
வெண்பா விளையாட்டும் விளையாட தெரியாது
வித்தக கவிபடைக்கும் வித்தையும் தெரியாது

கவிமொழி அறியாத கவிஞன் நானோ?
காதலியை வர்ணிக்கும் காதலன் நானோ?
கவிதைதான் என்றே நானும் சொன்னால்
கம்பனே நீயும் மண்ணிப்பாயோ?

அவள் முகிலின் மகளை முடியாய் சூட்டியவள்
அவள் முழுதாய் எனைதான் ஆட்சியும் செய்பவள்
மயில்களும் ஆடும் அவளின் மழைகுழல் காண
மலர்களும் தேடும் மங்கையவள் சூட

நிலவின் பிறையை நெற்றியாய் கொண்டவள்
நிலவின் நிறையை முகமாய் கொண்டவள்
கருப்பு வானவில்லை இரு புருவமாய் வளைத்தவள்
கருவண்டுகள் இரண்டினை விழிச் சிறையினில் அடைத்தவள்

அனுதினம் ஆயிரம் கவிதைகள் பேசும்
இருவரிக் கவிதையாய் இதழினை கொண்டவள்
அவள் கன்னம் வரைந்த வெட்கச் சிவப்பினில்
அந்தி வானச் சிவப்பை அடிமையும் செய்தவள்

வலம்பரிச் சங்கோ இடம்புரிச் சங்கோ தெரியாது
முத்து மாலைச் சூடும் கழுத்தினை- என்
முத்த மாலைச் சூட்ட தருபவள்
மோட்சம் இங்கேயென எனை மூழ்கச் செய்தவள்

இடம்பல தாண்டி இடை வந்து சேர்ந்தேன்
இடையினில் எனை சுமக்க ஆசையும் கொண்டேன்
இக்கணமே குழந்தையாக மாற வரமும் கேட்டேன்
இங்கேயே இருந்துவிட முடிவும் கொண்டேன்

அன்னைப் போல் என்னைதான் மனதினில் சுமப்பவள்
அவள் மழலை நானென அள்ளிக் கொள்பவள்
அவள் மடியினில் நானும் துயில்கையில்
அன்பெனும் மழையினை பொழிபவள்

கண்டம் பல தாண்டி காலடி வந்தேன்
கைகள் இரண்டும் தொழுதே பக்தனாய் நின்றேன்
சுவடெனும் ஓவியம் வரைந்து செல்லும்
பாதத் தூரிகைகளை பாதமாய் கொண்டவள்
அவள் பாதம் தொடும் மண்ணெல்லாம்
பாவம் போக்கச் செய்பவள்

இன்னுமென்ன மிச்சம்?
ஓ மச்சம் மட்டும் மிச்சம்
அழகை வரைந்த வரைந்த பிரம்மனவன்
சிதறிய தூரிகை துளிகள் அவை
அழகின் படைப்பு அவளோடு
முடிந்ததன் முற்றுப் புள்ளிகளும் அவை

அவள் அன்னைக்கு முன்பே பிரம்மனும் வைத்தானோ
எப்போதும் திருஷ்டி பொட்டாய் முகத்தில் ஒரு மச்சம்
பின்கழுத்தில் ஒரு மச்சம் இன்னும் சில மிச்சம்
அவை நான் காண எனக்கெங்கோ மச்சம்

இத்தனை சொல்லியும் பெயர் சொல்ல மறந்தேனோ
என்னவளின் பெயர் கேட்டால் கவிதையென்று சொல்வேனோ
"கவிதை"தான் அவளின் பெயரானதோ
அவளின் காதல்தான் எனது உயிரானதோ

எழுத்தறியா எனையும்தான் கவிஞனாக்கி சென்றாளவள்
எப்போதும் அவள் நினைவால் கவிபாடச் செய்தாளவள்
இவ்வுலகம் எங்கெங்கும் என் எழுத்தறியச் செய்தாளவள்

Thursday, 2 July 2015

நினைவில் வாழக் கற்கவில்லை.. கனவில் வாழக் கற்றுக்கொண்டேன்...

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று
என்று நானும் பொய் சொல்வேனோ-இனி
என்றுதான் நானும் துயில் கொள்வேனோ?

நினைவில் வரும் உன் நினைவெல்லாம்
நித்தம் என்னை கொல்லுதடி
நெருப்பில் உருகும் மெழுகைப் போல்
நித்தமும் நெஞ்சம் உருகுதடி

கனவாய் தினமும் விடிகின்றாய்
கண்ணீர் துளியாய் வடிகின்றாய்
காற்றாய் என்னை தொடுகின்றாய்
கானல் நீராய் மறைகின்றாய்

தோழியென்று தோள் தந்தாய்
அன்னையென்று மடி தந்தாய்
ஆசையோடு அன்னமூட்டினாய்
ஆயிரமாயிரம் என்னமூட்டினாய்

அன்னைப் போல் அமுதூட்டினாய்
அன்பையும் நீ சேர்த்தூட்டினாய்
இன்று ஏன் எனை வாட்டினாய்
இதயத்தின் வலி கூட்டினாய்

நினைவை தொலைக்க நானும்தான்
நித்தம் அதனை தேடுகின்றேன்
மூளையில் மூழ்கிப் போனதோ
இதயத்தில் இதமாய் துயில்கிறதோ
நரம்புகளில் ஒழிந்து கொண்டதோ
உயிரில் உயிராய் உறைந்திட்டதோ

உன் நினைவை தொலைக்க வேண்டுமென்றால்
நான் என்னை தொலைக்க வேண்டுமடி
என்னை தொலைக்க வேண்டுமென்றால்
என் மரணம் இன்றே வேண்டுமடி

பார்வைகளை நான் தொலைத்திருந்தால்
வெளிச்சத்தை நான் தேடிடுவேன்
பாதைகளை நான் தொலைத்திருந்தால்
வழிகளை நான் தேடிடுவேன்
பாவி உன்னை தொலைத்ததனால்
இன்று என்னை நானே தேடுகின்றேன்

பேசி சென்ற வார்த்தையெல்லாம்
காற்று திரும்ப பெற்றிடுமோ?
முத்தம் எழுதிய கவிதையெல்லாம்
முழுதும் இன்று அழிந்திடுமோ?

நினைவில் வாழக் கற்க வில்லை
கனவில் வாழக் கற்று கொண்டேன்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு
கவிதைப் பூக்கள் பறித்துக் கொண்டேன்

மரணம் என்னை தொடும்போது-உன்
நினைவை மறந்து போவேனோ?
எரிந்து சாம்பல் ஆனாலும்-உன்
நினைவின் துகளாய் பறப்பேனோ?

நிரம்பி வழியும் என் விழி அணைகள்

கடுங்கோடை காலத்திலும்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்
ஆமாம்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்

போதும் போதும்
என்று சொல்லுமளவிற்கு
அவள்
"அன்பு மழை" பொழிந்துச் சென்றதால்...

மனம் முழுதும் காதல் வலி

கண்ணாடி பார்க்கும் போதெல்லாம்
கண்ணீர் வருகிறது..
எத்தனை நரைமுடிகள் இளநரையாய் என்னில்?

இதற்காகவா கண்ணீர்?
இல்லை இல்லை

பின் ஏன் இந்த கண்ணீர்.?

மழலையாக அவள் மடியில்-நான்
மஞ்சம் கொண்ட ஒரு நொடியில்
வியர்வை நனைத்த முடிகளை
விரலால் கோதி சொல்லுகிறாள்...

"நாளை நம் பிள்ளை தங்களை
அப்பா என்று அழைக்காது
தாத்தா என்று அழைக்குமென்று"

இது
மங்கையவள் உரைத்த மொழி
இன்றோ
என் மனம் முழுதும்
"காதல் வலி"