கால்களில் மலைகளை கட்டிக்கொண்டு
நத்தையென ஊரும் வாழ்க்கையை
என்னால் எழுத இயலாது
இறகென மிதந்த நினைவுகளெல்லாம்
கல்மூட்டையென கனப்பதை
என்னால் எழுத இயலாது
உறக்கங்களை மறிக்கச் செய்யும்
நாகம் துரத்தும் கனவுகளை
என்னால் எழுத இயலாது
உயிர் விட்டுப் போன பின்பும்
வெற்றுக் கூடுகளாய்
உடல்களிரண்டு உலகில் உலாவுவதை
என்னால் எழுத இயலாது
பிரிகின்ற தருணங்களில் விளையும்
உப்பு கரிக்கும் முத்தங்களை
ஒருபோதும்
என்னால் எழுத இயலாது
ஆமாம்
தயவுசெய்து என்னை எழுதச் சொல்லாதீர்கள்
சேர இயலாத காதலொன்றை