உன் ஊரில்
உன் வீதியில்
உன் வாசலிலெல்லாம் எப்படியோ
ஆனால்
என் ஊரில்
என் வீதியில்
என் வாசலில்
உனக்கு பின்னரான நாட்களில்
மழையென்ற பெயரில்
பொழிந்து போவதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும் சகியே...
*
மழையும் வெயிலும் சேர்ந்தே பொழியும்
இந்த பின்மதிய வேளை
எல்லோருக்கும் எப்படியோ?
ஆனால் எனக்கோ
அழுகையும் தந்து ஆறுதலும் தரும்
உன் நினைவைப் போலிருக்கிறது...
*
கோடை மதியமொன்றில்
கொட்டித் தீர்த்த மழையை
சூட்டை கிளப்பி போனதாக
சொல்லிப் புலம்புகிறார்கள் அவர்கள்
நானும் புலம்புகிறேன் எனக்குள்ளே
உன் நினைவை கிளப்பி போனதாக...
*
உனக்கொன்று தெரியுமா சகியே
அடைமழையின்
இரவு காலங்களில்
நான்
போர்த்திக் கொள்வதெல்லாம்
உன் நினவுகளைதான் என்று....
*
"மழை நேரத்துல வெளியே போகாதீங்க
அப்புறம் நனைஞ்சுட்டு வந்து
காய்ச்சல் அது இதுனா
நான் மனுஷியா இருக்க மாட்டேன்"
கொஞ்சமும் அழியாமல்தான் வருகிறது
கொட்டிப்போன அன்பின் வார்த்தையெல்லாம்
கொட்டித் தீர்க்கும் இம்மழையோடு...
*
காயப்போட்ட துணிகளை எடுக்கவும்
மொட்டைமாடி வடகம் அள்ளவும்
குடைமறந்த கணவன் குறித்தும்
பதறி கொண்டிருக்கிறாய் நீ
மழைவிழத் துவங்கும் இவ்வேளையில்
நானும் பதறிதான் துடிக்கிறேன்
ஆம் சகியே
மழை கொண்டு வரும்
உன் நினைவுகளை எண்ணி ...
Wednesday, 20 September 2017
கண்ணில் சுடும் மழைக்காலம்
Subscribe to:
Comments (Atom)